புகைப்படம்: அதிரை எக்ஸ்பிரஸ்
அக்டோபர் 03: அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 கடைகள் எரிந்து சாம்பலானது. ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது. பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பெரிய கடை தெருவில் மீன் மார்க்கெட் வளாகம் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் இருக்கிறது.
இந்த கடைகளை அதன் உரிமையாளர்கள் நேற்று இரவு பூட்டி சென்றனர். நள்ளிரவு 11 மணி அளவில் திடீரென ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பக்கத்து கடைகளுக்கும் பரவியது. அங்கு இருந்த 3 சலூன், ஒரு கோழிக்கடை, 2 குடோன்கள், ஓட்டல், தொப்பி விற்பனை செய்யும் கடை, இனிப்பு வகைகள் தயாரிக்கும் கடை உள்ளிட்ட 11 கடைகள் இந் தீ விபத்தில் எரிந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தாமதமாக வந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். அவர்கள் வந்த தீயணைப்பு வண்டியை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். மேலும் தாமதமாக வந்த தீயணைப்பு வீரர் முத்து தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த அவர் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் பரபரப்பு உருவானது.
ஆனாலும் 3 ஊர்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 11 கடைகளிலும் வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. யாரோ மர்ம ஆசாமிகள் கடைக்கு தீ வைத்து விட்டதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் விசுவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீ விபத்தில் சேதம் அடைந்த கடைகளை பார்வையிட்டனர். அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணன் தலைமையில் போலீசாரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment