முத்துப்பேட்டை லகூன் பகுதியை சுற்றுலாதளமாக்க 2.5 கோடி நிதி தமிழக அரசு ஒதிக்கீடு.. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 10

முத்துப்பேட்டை லகூன் பகுதியை சுற்றுலாதளமாக்க 2.5 கோடி நிதி தமிழக அரசு ஒதிக்கீடு..


செப்டம்பர் 10: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு கழிமுகப் (லகூன்) பகுதியினை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்கிட முதல்அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மாங்குரோவ் சதுப்புநிலக் காடு முத்துப்பேட்டை. இது 11,885 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது; முத்துப்பேட்டை கழிமுகத்தில்  மாங்குரோவ் காடுகள், சிற்றோடைகள், கடற்கரைக் காயல், மணல்மேடுகள் அமைந்துள்ளன.
குளிர் காலத்தில் இப்பகுதியில் வாழ்வதற்கென நூற்றுக்கணக்கான விதவிதமான வெளிநாட்டு நீர்ப் பறவைகள் வருகின்றன. அவற்றில் கிரே பெலிக்கன் (பழுப்பு கூழைக்கடா), கிரேட்டர் பிளமிங்கோ (பூநாரை), டார்டர் (பாம்புத் தாரா), பின்டெயில் டக் (ஊசி வால் வாத்து) பெயின்டட் ஸ்டாக் (செங்கால் நாரை) ஆகியவை முத்துப்பேட்டையில் காணப்படும் முக்கிய பறவை இனங்களாகும்.
குள்ளநரி, பழந்தின்னி வெளவால் ஆகிய பாலூட்டிகள் இங்கு வாழ்கின்றன. முத்துப்பேட்டை கழிமுகத்தில் உள்ள முள்ளிப்பாலம் காயல் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை காயல் ஆகும். இது 11 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது. காவேரி ஆற்றின் கிளை நதிகளான நசுவினியாறு, பட்டுவாஞ்சியாறு, பாமினியாறு, கோரையாறு, கிளைத்தாங்கியாறு, மரக்காக்கோரையாறு ஆகிய ஆறுகள் இங்குள்ள மாங்குரோவ் காடுகளுக்கு நீர்வளம் தருகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச் சூழல் சுற்றுலா மையமாக உருவாக்குவதற்காக 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஒதுக்கீட்டின் மூலம் கண்ணாடி இழைப் படகுகள் வாங்குதல், மர வீடுகள் அமைத்தல், வரவேற்பு மையம் கட்டுதல், காட்சி கோபுரம் அமைத்தல், மரப்பாலம், அணுகுசாலை அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

பச்சைமலை சுற்றுலாதளம்
திருச்சி மாவட்டத்திலுள்ள பச்சமலை பகுதியினை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டுகளிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுலாத் தலமாக உருவாக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பச்சமலை 527.61 சதுர கீ.மீ. பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 160 முதல் 1,072 மீட்டர் உயரம் உள்ளது. இம்மலைப்பகுதியில் 35 காப்பு காடுகள் 19,075 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ளன. இம்மலைப் பகுதியிலிருந்து இயற்கை எழில் மிகுந்த கொல்லிமலையை ஒரு புறமும், துறையூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளை மற்ற இருபகுதிகளிலும் கண்டு களிக்கலாம். பறவைகள், பட்டாம்பூச்சிகள் இப்பகுதியில் 154 விதமான பறவையினங்கள் வாழ்கின்றன. 135 விதமான பட்டாம்பூச்சி வகைகளும் உள்ளன.
இங்கு உள்ள 3 மான்கள் வாழிடத்தில் சுமார் 50 மான்கள் வாழ்கின்றன. இதற்கு அருகே உள்ள சோலைமதி காப்புக் காட்டில் இந்திய சாம்பல் அணில்கள் காணப்படுகின்றன. மேலும் காட்டுப்பூனை, மரநாய், மலைப்பல்லி, மயில், குரங்கு, பறவைகளைக் கொல்லும் சிலந்தி, கண்ணாடி விரியன் பாம்பு ஆகிய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பச்சமலைப் பகுதியை அதிக அளவு பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம்படுத்திட 2 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் பச்சமலைப் பகுதி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here