செப்டம்பர் 10: முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம், அருவாங்காடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது 14 வயது மகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணிவண்ணன் (27). என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு செம்படவங்கரை அங்காளம்மன் கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றது.
இதுபற்றி திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜகோபால் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செம்படவக்கரை அங்காளம்மன் கோவிலுக்கு விரைந்து சென்றனர்.
அப்போது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் தில்லைவிளாகத்தில் நடைபெறும் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தில்லைவிளாகம் சென்றனர். இதனை அறிந்த மணமக்கள் சொந்த ஊரில் இருந்து தப்பி சென்று தலைமறைவாகி விட்டனர்.
இதுபற்றி திருமலைவிளாகம் கிராம நிர்வாக அதிகாரி மூர்த்தி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து மாயமான மணமக்களை தேடி வருகிறார்.
No comments:
Post a Comment