ஆகஸ்ட் 11: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வெள்ளிக்கிழமை காவல்துறையினரின் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது, கடைகள் மீது கல் வீசியது தொடர்பாக இரு சமுதாயத்தைச் சேர்ந்த 210 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
பா.ஜ.க. மாநிலச் செயலர் கறுப்பு (எ) முருகானந்தத்தின் பிறந்தநாளையொட்டி, வெள்ளிக்கிழமை அவரது ஆதரவாளர்கள் அவரை ஜாம்பவானோடையில் இருந்து முத்துப்பேட்டைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அதேநேரம், மற்றொரு சமுதாயத்தைச் சேர்நத சிலர் இரு சக்கர வாகனங்களில், பட்டுக்கோட்டை சாலையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக ஆசாத் நகர் வரை சென்றுவிட்டு மீண்டும் பழைய பேருந்து நிலையம் வழியாக ரயில் நிலைய சாலையில் போலீஸாரின் தடையை மீறிச் செல்ல முயன்றனர். அந்த சாலையில் பா.ஜ.க. பிரமுகர் பிறந்த நாளையொட்டி, ரத்த தான முகாம் நடைபெற்றதால், அந்த பகுதி வழியாக செல்ல மாற்று சமுதாயத்தினருக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால், அங்கிருந்த கடைகளின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வீச்சில் பாஸ்கர், சாகுல் அமீது, சரவணன் ஆகியோரின் கடைகள், சேதம் அடைந்தன. இதையடுத்து, போலீஸார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர்.
இதற்கிடையே, அப் பகுதி வர்த்தகர்கள் தங்கள் கடைகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் வர்த்தகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், மன்னார்குடி கோட்டாட்சியர் ராஜேஸ்வரி, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் வி. ராஜகோபால் ஆகியோர் அங்கு முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் சித்திக் உள்ளிட்ட 160 பேர் மீதும், பா.ஜ.க. செயலர் கறுப்பு (எ) முருகானந்தம் உள்ளிட்ட 50 பேர் மீதும் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
கடைகள், காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியது தொடர்பாகவும் 4 வழக்குகள் தனித் தனியே பதிவு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment