ஜுலை 04: அபுதாபி - அமீரக அரசிற்கு எதிராக சதிச் செய்தக் குற்றத்திற்காக 69 நபர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரக அரசினைக் கவிழ்ப்பதற்குச் சதிச் செய்ததாக அந்நாட்டினைச் சார்ந்த 94 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஏறத்தாழ நான்கு மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் நேற்று (03-07-2013) தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட 56 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தலைமறைவாகியுள்ள 8 பேருக்கு 15 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 25 பேர் குற்றமற்றவர்கள் என நீதிபதி பலாஹ் அல் ஹாஜிரி விடுதலைச் செய்துள்ளார்.
அல் இஸ்லாஹ் சொசைட்டி என்ற பெயரில் செயல்பட்ட இவர்கள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும், அமீரக அரசினை நீக்குவதற்காக செயல்பட்டு வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த அமைப்பின் தலைவராக ஷேக் சுல்தான் பின் காயித் அல் காஸிமி செயல்பட்டு வந்தார். எகிப்தினை தற்போது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கீழ் உள்ள அரசியல் கட்சி ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் விமர்சனத்திற்கு எதிராக அமீரக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் ஆனால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் நீதி அமைச்சகம் இந்த தீர்ப்பு சம்பந்தமாக கருத்துத் தெரிவித்துள்ளது.
தகவல்: இன்நேரம்
தகவல்: இன்நேரம்
No comments:
Post a Comment