செப்டம்பர் 19:எதிரி நாடான பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவ இரகசியங்களை கடத்த முயன்றதாகவும் அவரிடமிருந்து இராணுவ இரகசியங்கள் அடங்கிய சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுபற்றி புலனாய்வு ஊடகம் ஒன்று எழுதியுள்ள கட்டுரையில் இதன் நிஜப் பின்னணி வேறு என்று கூறப்பட்டுள்ளது.
இணையம் மூலமாகவே கடத்தப்பட வாய்ப்புள்ள படங்களை சிடியில் போட்டு விமானம் ஏறிச் சென்று கொடுத்துவர வேண்டுமா என்கிற கேள்வியும் வேறு சில வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினம் ஆசாத் நகரைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற 35 வயது வாலிபர் காய்கறி ஏற்றுமதி வியாபாரம் செய்துவந்ததாகவும், ஊட்டி, விசாகப்பட்டினம் சென்று அங்கு சில வாலிபர்களைச் சந்தித்து வந்ததாகவும், விசாகப்பட்டினம் கடற்படைத் தளம், அதன் அமைப்பு, போர்க் கப்பல்கள், ஊட்டி இராணுவ முகாம், அதன் பணிகள் ஆகியவற்றை சிடிக்களில் பதிந்து இலங்கையில் உள்ள ஐ எஸ் ஐ உளவாளி ஒருவரிடம் தந்து பணம் பெற்று வந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுபற்றி கேள்வி எழுப்பியுள்ள புலனாய்வு ஊடகம் ஒன்று இதில் வேறு வித மர்மம் இருப்பதாகவும், இராணுவ இரகசியம் என்பது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மாநில முதலமைச்சரின் அதிகார வரம்புக்குள் உள்ள Q பிரிவு காவல்துறை இராணுவ இரகசியம் போன்ற விவகாரங்களை கையாள்வதில்லை என்றும், டிஃபன்ஸ் இண்டெலிஜன்ஸ் ஏஜன்சி எனப்படும் அமைப்பு தான் இராணுவ இரகசியக் கடத்தல்களைக் கையாளும் என்றும் தெரிவிக்கிறது. வேறு ஏதோ 'காரணத்துக்காக' அந்த Q பிரிவு மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டு, வேறு ஏதோ காரணத்துக்காக 'இராணுவ இரகசியம் பிடிபட்டது' என்று செய்தி பரப்பப்படுவதாகவும் அந்த ஊடகம் எழுதியுள்ளது.
இந்நிலையில், கூடங்குளம் அணு மின் உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களுக்கு பாக்கிஸ்தானுடன் தொடர்பு உள்ளது என்று அரசு சதி செய்வதன் ஒரு திட்டமாகத் தான் இந்தக் கைது நிகழ்ந்துள்ளது என்று தமிழ் இணைய தளம் ஒன்று தெரிவித்து உள்ளது.
"இந்த கைதின் பின்னணியில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. குறிப்பாக தமீம் அன்சாரி ரகசியங்களை ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரிடமிருந்து பெற்றதாக முதலில் செய்தி வெளியிட்ட மீடியாக்கள் அந்த ராணுவ அதிகாரியின் பெயரை மறைத்து விட்டன. மேலும் சில மீடியாக்கள் இவர் பாக்கிஸ்தானிற்கு ராணுவ ரகசியங்களை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டதாகவும் சில மீடியாக்கள் இலங்கைக்கு கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டதாகவும் மாறி மாறி செய்திகள் வெளியிட்டதும் மர்மமாகவே உள்ளது. இது குறித்து உண்மையறியும் குழு அமைத்து விசாரித்து வருகிறோம்" என நமதூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரும் மனித உரிமை ஆர்வலருமான Z.முஹம்மது தம்பி கூறியுள்ளார்.
தகவல் : அதிரை எக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment