செப்டம்பர்19: கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த போட்டி 20-20 போட்டியாகும். ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை அறிமுகப்படுத்தியது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டியை நடத்த முடிவு செய்தது.
தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 2-வது உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றது. 3-வது உலக கோப்பை ஒரு ஆண்டு முன்னதாக 2010-ல் வெஸ்ட் இண்டீசில் நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்து வென்று உலக கோப்பையை கைப்பற்றியது.
4-வது ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை போட்டி இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி இன்று (18-ந் தேதி) முதல் அக்டோபர் 7-ந்தேதி) வரை நடக்கிறது. இதில் 12 நாடுகள் பங்கேற்கின்றன. அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்று மூலம் நுழைந்தது.
இந்த 12 அணிகளும் தரவரிசை அடிப்படையில் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒவ்வொரு அணியும் இடம்பெற்றுள்ள பிரிவுகள் வெளியிடப்பட்டன.
‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து (ஏ-1) இந்தியா (ஏ-2) ஆப்கானிஸ்தான், அணிகளும் ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா (பி-1) வெஸ்ட் இண்டீஸ் (பி-2) அயர்லாந்து அணிகளும், ‘சி’ பிரிவில் இலங்கை (சி-1) தென் ஆப்பிரிக்கா (சி-2) ஜிம்பாப்வே அணிகளும், ‘டி’ பிரிவில் பாகிஸ்தான் (டி-1) நியூசிலாந்து (டி-2) வங்காளதேசம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
‘லீக்’ சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதவேண்டும். ‘லீக்‘ சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெறும்.
25-ந் தேதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிகிறது. இதன் முடிவில் 8 அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறும். இந்த 8 அணிகளும் ‘இ’ மற்றும் ‘எப்’ என 2 பிரிவாக பிரிக்கப்படும். ‘சூப்பர்8’ சுற்று 27-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை நடக்கிறது. இதன் முடிவில் இரண்டு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதியில் நுழையும். அக்டோபர் 4 மற்றும் 5-ந்தேதி அரை இறுதியும், இறுதிப் போட்டி 7-ந்தேதியும் நடைபெறும்.
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை எந்த அணி வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியாது. அதிரடியான ஆட்டம், சிறப்பான பீல்டிங் மூலம் ஆட்டத்தின் முடிவு அமையும். ஒரு ஓவர்கூட ஆட்டத்தின் தன்மையை மாற்றிவிடும். தர வரிசையில் பின்தங்கியுள்ள அணிகள் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்.
முதல் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் ஜிம்பாப்வேயிடம் தோற்றது. வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசத்திடம் தோற்றதால் முதல் சுற்றிலேயே வெளியேறியது. 2-வது உலக கோப்பையில் இங்கிலாந்து அணி நெதர்லாந்திடம் தோற்றது. அதேபோன்ற அதிர்ச்சி இந்த உலக கோப்பையில் நடந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் முன்னணி அணிகள் உள்ளன.
ஏற்கனவே வென்ற அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லுமா அல்லது புதிய அணி கோப்பையை கைப்பற்றுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேவாக், வீராட் கோலி, காம்பீர், ரெய்னா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களால் இந்திய அணி வலுவானதாக காணப்படுகிறது. இதே போல் மற்ற அணிகளிலும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஒவ்வொரு அணியும், கோப்பையை வெல்ல கடுமையாக போராடும். இதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment