ஆகஸ்ட் 20: தமிழகத்தில் முஸ்லிம்களின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினத்தில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற எஸ்.எம்.எஸ் செய்தி தீவிரமாக பரவியுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் மருத்துவமனையை நாடியுள்ளனர். இந்த எஸ்.எம்.எஸ் செய்தியின் பின்னணியில் இருப்பவர்கள் ஹிந்துத்துவா சக்திகளா? என சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் குமரி மாவட்டம் தவிர(நேற்று இங்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் கொண்டாடப்பட்டது) இதர மாவட்டங்களில் இன்று ஈதுல் ஃபித்ர் என அழைக்கப்படும் சிறிய பெருநாள் ஆகும். இதையொட்டி முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் பெருநாளுக்கு முந்தைய இரவில் மெஹந்தி என அழைக்கப்படும் மருதாணியை கை, கால்களில் போட்டு அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்வர்.
இந்த நிலையில், மெகந்தி போட்டவர்களுக்கு கைகளில் அரிப்பு ஏற்படுவதாகவும், வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் செய்தி பரவியது. இதனால் பீதி அடைந்த பெண்கள் அச்சத்துடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் மெகந்தி பீதியினால் அச்சமடைந்தவர்கள் இரவு நேரத்தில் மருத்துவமனையில் குவிந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் மூன்று பேர் பலியானதாக வந்த வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. மேலும் பள்ளிவாசல்களில் ஒலிப்பெருக்கி மூலம் தகவல்கள் பரப்பப்பட்டதால் மக்கள் பெரும் பீதி வயப்பட்டனர். மாவட்டத்தின் களக்காடு பகுதிகளில் வீடு வீடாக சென்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மேலும் கலக்கமடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணற நேரிட்டது. அச்சமடைந்துள்ள தங்களுக்கு மருத்துவர்கள் எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் தட்டிக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பரவிய பீதியால் விடிய விடிய பெண்களும், குழந்தைகளும் தூங்காமல் அச்சத்துடன் விழித்திருந்தனர். இதனிடையே இது வதந்திதான் என்று ஈதுல் ஃபித்ர் பெருநாள் தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க செய்த சதி என்று முஸ்லிம் சமுதாய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவிய வதந்தியால் முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்துடனும், பதற்றத்துடனும் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வதந்தி காட்டுத் தீயாக பரவ ஒரு எஸ்எம்எஸ்ஸும் காரணமாக அமைந்தது. அதாவது, மும்பையில் ஒரு பெண் தனது மகளுக்கு மெஹந்தி வைத்ததாகவும், அதனால் கெமிக்கல் உடலில் பிரச்சினையை ஏற்படுத்தி அந்தப் பெண்ணின் கை, கால்கள் பாதிக்கப்பட்டு துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டு விட்டதாகவும், இதைப் பார்க்க முடியாத பெற்றோர் அந்தப் பெண்ணை விஷம் கொடுத்துக் கொன்று விட்டதாகவும் எஸ்.எம்.எஸ் மூலம் பரவியது. இதுதான் பலரையும் பீதிக்குள்ளாக்கி விட்டது.
இருப்பினும் தமிழகத்தின் எந்த இடத்திலும் யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று டாக்டர்கள் மற்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். யாரும் மரணம் அடையவில்லை, உள் நோயாளியாகக் கூட அனுமதிக்கப்படவில்லை. எஸ்.எம்.எஸ். வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே வட கிழக்கு இந்தியர்கள் குறித்த வதந்தியால் முஸ்லிம்கள் பெரும் மன வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் ஈதுல் ஃபித்ர் கொண்டாடும் நேரத்தில் தங்களைக் குறி வைத்து பரப்பப்பட்ட இந்த வதந்தியால் அவர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர்.
இந்த வதந்தி செய்தி வளைகுடாவில் வேலைப்பார்க்கும் முஸ்லிம்களின் மத்தியிலும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த வதந்திகளின் பின்னணியில் ஹிந்துத்துவா சதி இருக்குமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தவேண்டும்! செய்வார்களா? அல்லது அண்டை நாட்டின் மீது பழியை போட்டு தப்பிக்க பார்ப்பார்களா?
No comments:
Post a Comment