ஆகஸ்ட் 22: கிராமமாக இருந்து பெருநகரமாக (காஸ்மோபாலிடன்) உயர்ந்த சென்னை உருவாகி இன்றுடன் 373 ஆண்டுகள் ஆகிறது.
தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி உருவானது.பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரம், தொடக்க காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து கிடந்தது.
அந்தப் பகுதிகளை பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்தனர். அந்த சமயத்தில், வெளிநாடுகளில் இருந்து வர்த்தகர்களும், மதபோதகர்களும் கப்பல் மூலம் வந்து சென்னை கடற்கரையில் இறங்கியுள்ளனர்.சிறிய கிராமமாக இருந்த அந்தப் பகுதி `சென்னப்பட்டிணம்' என்று அழைக்கப்பட்டது.
1639-ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், அந்தப் பகுதியை ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பு அமைக்க தேர்வு செய்தனர். அதன்பிறகு, ஓராண்டு கழித்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதை மையமாக வைத்து ஆங்கிலேயர்களின் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இதனால், சென்னப்பட்டிணத்தை சுற்றி பரவலாக இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு போன்ற கிராமங்களும் ஒன்றிணைந்தன. 1688-ம் ஆண்டு சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகரசபை என்ற புகழ் சென்னைக்கு கிடைத்தது.
1746-ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர்.அதன்பிறகு, 1749-ம் ஆண்டு இவைகள் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன.அதன்பின்னர்தான், சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சியடைய தொடங்கியது.இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரெயில் பாதைகள் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.
சென்னப்பட்டிணம் என்ற பெயரில் கிராமமாக இருந்த ஆரம்பகால சென்னை, அதன்பிறகு மதராஸ் பட்டிணம்,மதராஸ் மாகாணம் என்ற பெயரைத் தாண்டியே சென்னை என அழைக்கப்பட்டது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக சென்னை அமைந்தது.
1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களை பிரித்தபோது, மதராஸ் தமிழ்நாட்டின் தலைநகரமானது. அதன்பின்னர், 1996-ம் ஆண்டு மதராஸ், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை அனைத்து தரப்பு மொழிகள் பேசும் மக்கள் வசிக்கும் 'காஸ்மோபாலிடன்’ நகரமாக சென்னை விளங்கிவருகிறது.
இந்தியாவிலேயே அதிக வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் இங்குதான் உள்ளன. கம்ப்யூட்டர் சேவை, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் நிதி சேவைகள் உள்பட பல்வேறு துறைகளிலும் சென்னை சிறந்து விளங்குகிறது.
சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரயில் மற்றும் விமான சேவையும், வெளிநாடுகளுக்கு விமான சேவையும், அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்தும் இருந்து வருகிறது.
அன்றைய கால கட்டிடக்கலைக்கு சான்றுகளாக, சென்னை உயர் நீதிமன்றம், சென்னை பல்கலைக்கழக கட்டிடம், எழும்பூர் அருங்காட்சியகம், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், மெமோரியல் ஹால், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்டவைகள் இருக்கின்றன.
தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாது,பீகார்,அசாம் போன்ற வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள நகராக சென்னை உருவெடுத்துள்ளது. நிறைவேறிக் கொண்டிருக்கும் மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டங்கள் சென்னையின் எதிர்கால வளர்ச்சியை கட்டியம் கூறிக்கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment