ஜூலை 25: சிரியாவில் அதிபர் பஷர்-அல் ஆசாத்துக்கு எதிராக ஒரு வருடத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக புரட்சி படை களம் இறங்கி உள்ளது.
இதை தொடர்ந்து ராணுவத்துடன் நடக்கும் சண்டையில் இதுவரை சுமார் 18 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இன்னும் போராட்டம் ஓயவில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தொழில் நகரமான அலெப்போ புரட்சி படையின் பிடியில் இருந்தது. அதை மீட்பதற்காக ராணுவம் அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அங்கு குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.
நேற்று நடந்த சண்டையில் புரட்சி படையைச் சேர்ந்த பலர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். ஹமா நகரிலும் ஆசாத் அரசின் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ராணுவம் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டிருந்தது. மாலையில் அங்குள்ள மசூதியில் பொது மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த மசூதி மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்.
உடனே அங்கிருந்தவர்கள் வெளியே வந்து தப்பி ஓடமுயன்றனர். ஆனால் அங்குள்ள ரோடுகளை ராணுவத்தினரும், ஆசாத் ஆதரவாளர்களும் மூடி விட்டனர். எனவே அவர்களால் தப்ப முடியவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டது. அதில் 30 பேர் உயிரிழந்தனர். ரோடுகளில் ஆங்காங்கே பிணக் குவியல்கள் கிடக்கின்றன. எனவே சாவு எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாக புரட்சி படையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment