ஜூன். 18- 14-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைனில் நடைபெற்று வருகிறது.
‘பி‘ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து-போர்ச்சுக்கல் அணிகள் மோதின. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அபாரமான ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது அந்த அணியின் வான்டர் வாரட் இந்த கோலை அடித்தார். இதற்கு போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், ரியல் மாட்ரிட் கிளப் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிலடி கொடுத்தார். அவர் 24-வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார்.
முதல் பாதி ஆட்டத்தில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. 74-வது நிமிடத்த்தில் ரொனால்டோ 2-வது கோலை அடித்தார். ஆட்டத்தில் இறுதிவரை நெதர்லாந்து அணியில் 2-வது கோலை அடித்து சமன் செய்ய முடியவில்லை. இதனால் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது.
நெதர்லாந்து தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது. அந்த அணி ஏற்கனவே 0-1 என்ற கணக்கில் டென்மார்க்கிடமும், 1-2 என்ற கணக்கில் ஜெர்மனியிடமும் தோற்றது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது.
ஜெர்மனி அணியில் லுகாஸ் பொடோல்ஸ்கியும் (19-வது நிமிடம்) பெண்டரும் (80-வது நிமிடம்), டென்மார்க் தரப்பில் குரோன் டெல்லியும் (24-வது நிமிடம்) கோல் அடித்தனர். ஜெர்மனி அணி தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்று ஹாட்ரிக் சாதனை புரிந்தது.
அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கலையும் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தையும் தோற்கடித்தது. ‘பி‘ பிரிவில் ஜெர்மனி 3 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், போர்ச்சுக்கல் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும் பிடித்தன.
முதல் 2 இடங்களை பிடித்த ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. டென்மார்க் (ஒரு வெற்றியுடன், 3 புள்ளி) 3-வது இடத்தையும், நெதர்லாந்து வெற்றி எதுவும் பெறாமல் கடைசி இடத்தையும் பிடித்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.
கடந்த உலக கோப்பையில் 2-வது இடத்தை பிடித்த நெதர்லாந்து- ஐரோப்பிய கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியது மிகவும் பரிதாபமே.
ஜெர்மனி அணி கால் இறுதியில் கிரீசையும் (22-ந்தேதி) போர்ச்சுக்கல் அணி கால் இறுதியில் செக் குடியரசுவையும் (21-ந்தேதி) சந்திக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் ‘சி‘ பிரிவில் உள்ள ஸ்பெயின்-குரோஷியா, இத்தாலி-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான ஸ்பெயின், குரோஷியா அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. 2 புள்ளிகளுடன் இருக்கும் முன்னாள் சாம்பியனான இத்தாலி அதிக கோல் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தினால் மட்டுமே கால் இறுதிக்கு தகுதி பெறமுடியும்.
No comments:
Post a Comment