மே. 2- ஐ.பி.எல். போட்டியில் ஷேவாக்கின் அதிரடி ஆட்டம் தொடர்கிறது. அவரது தலைமையிலான டெல்லி அணி ராஜஸ்தானை மீண்டும் வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் டிராவிட் 43 பந்தில் 57 ரன்னும் (7 பவுண்டரி), ரகானே 32 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர். பவன் நேகி 4 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 15.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஷேவாக் அதிரடியாக விளையாடி 38 பந்தில் 73 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.
ஷேவாக் தொடர்ந்து 5-வது அரை சதம் அடித்து முத்திரை பதித்தார். புனே வாரியர்சுக்கு எதிராக 57 மற்றும் 87 ரன்னும், மும்பைக்கு எதிராக 73 ரன்னும், ராஜஸ்தானுக்கு எதிராக 63 ரன்னும் எடுத்தார். தற்போது ராஜஸ்தானுக்கு எதிராக 73 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 5 அரை சதம் அடித்தது குறித்து ஷேவாக் கூறியதாவது:-
தொடர்ந்து 5 அரை சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அதிர்ஷ்டம் என்றுதான் நான் நினைக்கிறேன். எனது அதிரடியான ஆட்டம் இந்த தொடர் முழுவதும் இருக்கும் என்று நம்புகிறேன்.
5-வது ஐ.பி.எல். போட்டி தொடங்கும்போது எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படவில்லை. கோப்பையை வெல்ல எங்களுக்குத்தான் வாய்ப்பு என்றால் நெருக்கடியை ஏற்படுத்தும். நாங்கள் சரியான போட்டியை கொடுக்கக்கூடிய அணியாகும். நான் சிறப்பாக விளையாடுவதற்கு என்னுடன் இருப்பவர்களே காரணம். நேகியின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி அணியிடம் மீண்டும் தோற்றது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் டிராவிட் கூறியதாவது:-
இந்தப் போட்டி தொடரிலேயே நாங்கள் விளையாடிய மோசமான ஆட்டம் இதுவாகும். எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. இதனால் 180 ரன்கள் வரை குவிக்க இயலும் என நினைத்தேன். ஆனால் விக்கெட்டுகள் திடீரென சரிந்ததால் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இயலவில்லை. நாங்கள் மிகவும் மோசமாக விளையாடினோம்.
ஷேவாக்கை முன்னதாகவே அவுட் செய்து இருக்க வேண்டும். அப்போதுதான் வாய்ப்பு கிடைத்து இருக்கும். அவர் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன். இளம் வீரரான ரகானே தொடர்ந்து சிறப்பாக ஆடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது நாங்கள் 4 போட்டியில் தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளோம். மீண்டும் எழுச்சி பெறுவது அவசியமாகும்.
இவ்வாறு டிராவிட் கூறினார்.
டெல்லி டேர்டெவில்ஸ் பெற்ற 8-வது வெற்றியாகும். அந்த அணி 11-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வருகிற 7-ந்தேதி எதிர்கொள்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் சந்தித்த 6-வது தோல்வியாகும். அந்த அணி 11-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5-ந்தேதி எதிர்கொள்கிறது

No comments:
Post a Comment