
பிப்.19- ஈரான் அணு உற்பத்தியை பெருக்குவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதம் தயாரிக்க அவற்றை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுகின்றனர். அதை ஈரான் மறுத்துள்ளது. மின்உற்பத்தி செய்யவே அணு உலைகள் பயன் படுத்தப்படுவதாக கூறி வருகிறது.
இருந்தும் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடந்த நவம்பர் மாதம் பொருளாதார தடைவிதித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணை கப்பல்கள் தனது கடல்பகுதியில் உள்ள ஹோர்ம்ஸ் ஜலசந்தி வழியாக செல்லவிடாமல் தடுத்து வருகிறது. போர் ஒத்திகை என்ற பெயரில் அங்கு தனது போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா, தாய்லாந்தில் உள்ள இஸ்ரேல் தூதரகங்களில் குண்டு வெடித்தன. இதற்கு ஈரான் தீவிரவாதிகள்தான் காரணம் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் அமெரிக்காவின் தீவிர நட்பு நாடாகும். இது ஈரான் அருகே உள்ளது. எனவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத் தும் என்ற அச்சத்தில் அமெரிக்கா தனது 2-வது போர்க் கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது 2 போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலில் நிலை நிறுத்தியுள்ளது. அவை சூயஸ் கால்வாயை கடந்து சென்றன. இந்த தகவலை ஈரான் கப்பற்படை கமாண்டர் அட்மிரல் ஹபிபுல்லா சயாரி தெரிவித்துள்ளார். ஆனால் எத்தனை போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கவில்லை. இஸ்லாமிய குடியரசு நாடுகளின் பாதுகாப்புக் காகதான் ஈரானின் போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.
அவை சமாதானம் மற்றும் நட்பு ஆகியவற்றை வலியுறுத்தவே அங்கு செல்கின்றன. போர் நடத்துவதற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதே நேரத்தில் இஸ்ரேலில் போர் பதட்டம் நிலவுகிறது. ஈரான் தனது அணு ஆயுதம் மூலம் தங்கள் நாட்டை தாக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ மந்திரி இகுட் பராக் தெரிவித்துள்ளார். மேலும் ஈரானுக்கு உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என டோக்கியோவில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
