ஜுன் 08: மும்பை நகரவாசிகள் பலகாலமாக எதிர்பார்த்திருந்த மெட்ரோ ரயில் சேவைகள் மஹராஷ்டிர மாநில முதல்வர் பிரித்விராஜ் சவானால் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
மும்பை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டமாக வெர்சோவா- அந்தேரி - கட்கோபார் ஆகிய இடங்களுக்கு இடையில் 11.4 கிலோமீட்டர் தூரத்துக்கு தற்போது சேவைகள் ஆரம்பித்துள்ளன.
சாலை வழியாக செல்லும்போது 40 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை எடுக்கக்கூடிய இந்த தூரத்தை மும்பைவாசிகள் இனி 20 நிமிடங்களில் செல்ல முடியும்.
நான்கு நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இச்சேவை திட்டமிடப்பட்டுள்ளது.
நான்கு பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் 1500 பேர் வரை பயணிக்க முடியும்.
ஒரு நாளைக்கு 200 முதல் 250 ரயில் சேவைகள் செயல்படுத்தப்படும் என்பதால், 11 லட்சம் பேர் ஒரு நாளில் இந்த சேவையை பயன்படுத்திட முடியும் என்று மதிப்பிடப்படுகிறது.
ரிலையன்ஸ் உட்கட்டமைப்பு நிறுவனம், வெயோலியா போக்குவரத்து நிறுவனம் ஆகிய தனியார் நிறுவனங்களும் மும்பை பெருநகர அபிவிருத்தி கழகம் என்ற அரசுத் துறையும் சேர்ந்து உருவாக்கியுள்ள மும்பை மெட்ரோ ஒன் என்ற நிறுவனத்தினால் இந்த மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு இந்த மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பித்திருந்தன.
பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தாமதங்களுக்கு பின்னர் தற்போதுதான் இந்த திட்டத்தின் முதல்கட்ட பணிகள் முடிந்து சேவை ஆரம்பித்துள்ளது.
இந்த ரயில் சேவைக்கான கட்டணம் தொடர்பில் மாநில அரசுக்கும் ரயில் நிறுவனத்துக்கு இடையில் பிரச்சினை உருவாகியுள்ளது.
9 ரூபாய் முதல் 13 ரூபாய் வரையிலான கட்டணமே வசூலிக்க வேண்டும் என மாநில அரசு நிர்ணயித்திருந்தது.
ஆனால் ரயில் சேவையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கான கட்டுமான செலவு அதிகமாகிவிட்டது என்பதால், ரூ.10 ரூபாய் முதல் ரூ.40 வரையிலான கட்டணம் வசூலிக்க மும்பை மெட்ரோ ஒன் தீர்மானித்தது.
இந்தப் பிரச்சினை தொடர்பில் மும்பை பெருநகர அபிவிருத்திக் கழகம் ஏற்கனவே நீதிமன்றத்தில் முறையிட்டும் உள்ளது.
மும்பையில் கடந்த பிப்ரவரியில்தான் செம்பூருக்கும் வாட்லாவுக்கும் இடையில் மோனோரயில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவில் சென்னையிலும் மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளது.







No comments:
Post a Comment