ஜுன் 09: தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை திருவாரூர் மாவட்ட புதிய கலெக்டர் அறிவிப்பு!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மதிவாணன் எச்சரிக்ககை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள மதிவாணன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஒ மணிமாறனிடமிருந்து பொறுப்புகளை பெற்றுக் கொண் டார்.
பின்னர் கலெக்டர் மதிவாணன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் நிதி ஆதாரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி அரசின் திட்டங்களை திருவாரூர் மாவட்டத்தில் சீராகவும், சிறப்பாகவும் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம், கல்வி, விவசாயம் ஆகியவற்றிற்கு முன்னு ரிமை அளிக்கப்படும். கல்வியில் திருவாரூர் மாவட்டம் பின்தங்கிய நிலையில் இருப்பதால் இதனை சரிசெய்யும் வகையில் நாளை (10ம்தேதி) மாவட்டத்தில் உள்ள கல்விதுறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவைகள் போன்றவைகள் குறித்தும், தேர்ச்சி சதவிகிதம் ஏன் குறைகிறது என்றும் ஆய்வு நடத்தப்படவுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அரசு அறிவித்துள்ள ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீட்டினை முழுமையாக வழங்க வேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். இதைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் மதிவாணன் இதற்கு முன்னர் ஊரக வளர்ச்சி துறையில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்தார். நாமக்கல் மாவட்டம் தாத்தையார்பட்டி கிராமம் இவரது சொந்த ஊராகும். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். 1984ம் ஆண்டு கோவை வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி விவசாயம் பட்டப் படிப்பை முடித்து விட்டு 1992ம் ஆண்டு எம்.பி.ஏ பட்டம் படித்து அதில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். 1997ல் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்தார். சேலம் உட்பட பல்வேறு ஊர்களில் ஆர்.டி. ஒவாகவும், பின்னர் 2004-2005ம் ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் டி.ஆர்.ஓவாகவும் பணியாற்றியுள்ளார். 2005ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் ஆக பதவி உயர்வு பெற்று சென்னை சுகர்ஸ் கூடுதல் ஆணையராகவும், 2011 ஜூன் 3ந் தேதி முதல் 2012ம் ஆண்டு செப்டம்பர் 30ந் தேதி வரையில் ஒன்றரை வருட காலம் திருப்பூர் மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றி பின்னர் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்தார். தற்போது திருவாரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.


No comments:
Post a Comment