பிப். 22- சென்னை நகரின் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பூமிக்கு மேல் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி பெருமளவில் முடிந்துவிட்டது.
மீதம் உள்ள வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில் செல்வதற்கான சுரங் கப்பாதை அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான சோதனைகள் நகரில் இந்த பாதை அமையும் இடங்களில் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களை அமைக்கும் இடங்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டன.
பூமிக்கு அடியில் அமையும் ரெயில் நிலையங்களின் நீளம், அகலம், உயரம் குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டது. என்றாலும் ரெயில் நிலையத்தின் வடிவம், வாயில், காற்றோட்ட வசதி போன்ற வற்றுடன் கூடிய வடிவமைப்பு பற்றி முடிவு செய்வதற்காக பாரம்பரிய கட்டிட வடிவமைப்பு குழு உள்ளது.
இந்த குழுவின் இறுதி முடிவு வந்த பிறகே ரெயில் நிலைய கட்டிட பணியை தொடங்க முடியும். மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை ரெயில் நிலைய வடிவமைப்புக்கு அங்கீகாரம் பெறுவதற்கான திட்ட அறிக்கை கட்டிட வடிவமைப்பு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக மெட்ரோ ரெயில, சுரங்கப்பாதை அமைப்பது மற்றும் பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே கட்டிடத்துக்கான குழுவிடம் விரைவாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே அமைய உள்ள மெட்ரோ ரெயில் நிலையம், சென்னை ஐகோர்ட்டு, விக்டோரியா ஹால், ரிப்பன் மாளிகை போன்ற பாரம்பரிய கட்டிடங்களின் வடிவமைப்பில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
