மார்ச் 07: திருச்சி விமான நிலைய சுங்கத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிபிஐ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரொக்கம் ரூ. 3 லட்சம் சிக்கியதை அடுத்து, அங்கு பணியிலிருந்த சுங்கத்துறை பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி விமான நிலையம் வழியாக அண்மைக்காலமாக தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது. மேலும், திருச்சி வரும் பயணிகளிடம் அவர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு முறையாக வரிகள் விதிக்கப்படுவதில்லை எனவும், முறைகேடாக ரொக்கம் பெற்றுக்கொண்டு ஏராளமான பொருட்களை வெளியே எடுத்துச்செல்ல அனுமதிப்பதாகவும் சுங்கத் துறையினர் மீது புகார்கள் சென்றன.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாலை சுங்கத் துறையில் சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாட்டு விமானங்கள் வந்து சோதனை முடித்து பயணிகள் தங்கள் உடைமைகளுடன் வெளியே வந்த நேரத்தில், சிபிஐ உதவி ஆணையர் லாசர் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் திடீரென திருச்சி விமான நிலையத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் சுங்கத் துறையில் அன்றையதினம் பயன்படுத்திய ரசீது புத்தகம், வசூலான வரி, அபராத தொகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டதோடு, ரூ. 3 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கணக்குகளை ரசீது புத்தகத்துடன் ஒப்பிட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கிய ஆய்வு வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்தது. இதைத்தொடர்ந்து, பணியிலிருந்த சுங்கத் துறை பணியாளர்களின் வீடுகளிலும் வெள்ளிக்கிழமை சோதனை தொடர்ந்தது.
தகவல்: அதிரை நியூஸ்
தகவல்: அதிரை நியூஸ்
No comments:
Post a Comment