மே.31:சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும், 1-ந்தேதி மற்றும் 16-ந்தேதி பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.
கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்தது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்தது. இதனால் இழப்பை சரி கட்டுவதற்காக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 என்ற அளவில் எண்ணை நிறுவனங்கள் உயர்த்தின.
இதற்கு எதிர்ப்பும் நாடெங்கும் கண்டனப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணை நேற்று 111 டாலரில் இருந்து 106 டாலராக குறைந்துள்ளது.
இதற்கிடையே டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சாதகமாக மாறியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ரூபாய் மதிப்பில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை. இத்தகைய காரணங்களால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு சாதகமான நிலை சீராக உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த வாரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை சற்று குறைக்க இந்திய எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரை குறைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று அல்லது நாளை இதுபற்றி ஆலோசித்து விலை குறைப்பு முடிவை அறிவிப்பார்கள்.
எண்ணை நிறுவனங்களின் அறிவிப்பு இன்றிரவு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் பெட்ரோல் விலை குறைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வரலாம்.
இதற்கான நடவடிக்கைகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வேகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வில்லை என்பதை நிரூபிப்பதுடன், போராட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
No comments:
Post a Comment