மார்ச்.5- தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் உச்சகட்டத்தில் இருக்கும். அனல் காற்றும், வெப்பத்தின் தாக்கமும் மக்களை வாட்டி வதைக்கும்.
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரி மாத இறுதிலேயே கோடை வெயில் கொண்டாட்டம் தொடங்கி விட்டது. இப்போதே வேலூர், பாளையங்கோட்டை பகுதிகளில் 100 டிகிரி வெயில் கொளுத்துகிறது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாகி வருகிறது. சென்னையிலும் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று மீனம்பாக்கத்தில் 96.26 டிகிரியும்,நுங்கம்பாக்கத்தில் 92.66 டிகிரியும் வெயில் தாக்கியது.
சென்னையில் இப்போதே காற்றும் அனலாகி விட்டதால் பொதுமக்கள் வியர்வை மழையில் நனைகிறார்கள். இரவு நேரத்தில் வியர்வை புழுக்கத்தால் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்கள். இப்போதே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்கள் எப்படி இருக்குமோ? என்று மிரளுகிறார்கள்.
தமிழகத்தில் நேற்று முக்கியமான நகரங்களில் பதிவான வெயில் அளவு வருமாறு:-
மதுரை-96.8, கோவை-95.54, திருச்சி-100.76, சேலம்-99.32, வேலூர்-98.6, கடலூர்-96.98, நாகப்பட்டினம்-95, தூத்துக்குடி-91.94.
வெயில் உக்கிரமாக இருப்பதால் தாகம் தணிக்கும் தர்பூசணி, மோர், இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. ரோட்டோரத்தில் இளநீர், தர்பூசணிகள் குவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டில் இதேபோல் முன்கூட்டியே கோடைகாலம் சுட்டெரிக்க தொடங்கியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் முன்கூட்டியே கோடை வெயில் தொடங்கியிருக்கிறது.

No comments:
Post a Comment