மே 15: ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை.
குளுகோஸ் கரைசல் என, நினைத்து, 'ஆசிட்' குடித்ததால், ஆறு ஆண்டுகளாக, சாப்பிட முடியாமல் தவித்த சிறுவனுக்கு, அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள், 13 அறுவை சிகிச்சைகள் செய்து குணப்படுத்தியுள்ளனர்.
குளுகோஸ் கரைசல்:
சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அசோக் என்பவரின் மகன் பிரேம், 12. கடந்த 2008ல், தன், ஆறு வயதில், குளுகோஸ் கரைசல் என நினைத்து, வீட்டில் இருந்த ஆசிட்டை (சோடியம் ஹைட்ரோ குளோரைடு) குடித்தான். இரண்டு மாதமாக, இருமல், வலியுடன் பேச முடியாமல் அவதிப்பட்டான்; உடல் எடை, 22 கிலோவில் இருந்து, 10 கிலோவாக குறைந்தது. இரண்டு மாதத்திற்குப்பின், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உணவு செலுத்த, சிறு குடலுக்குள் சிறு குழாய் பொருத்தப்பட்டது.
ஆனாலும், சிக்கல் தீராமல், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். இரைப்பை, குடல், அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் சந்திரமோகன் தலைமையிலான, டாக்டர்கள் குழுவினர், ஆறு ஆண்டு களாக போராடி, 13 அறுவை சிகிச்சைகள் செய்து, ஆறு ஆண்டுகளாக சாப்பிடாத சிறுவனை, சாப்பிட வைத்து, பேச வைத்து சாதித்துள்ளனர்.
இதுகுறித்து, டீன் விமலா, டாக்டர் சந்திரமோகனும் கூறியதாவது: ஆசிட்டின் தாக்கம், உணவுக்குழாயை முழுமையாக அடைத்திருந்தது. இரைப்பையின் ஒரு பகுதியும் சுருங்கி இருந்தது. பெருங்குடலை கழுத்து பகுதிக்கு கொண்டு வந்து, உணவுக்குழாயாக மாற்றும் மிக நுணுக்கமான சிகிச்சை செய்தோம். 16வது நாளில், சிறு குடல் அடைப்பு ஏற்பட்டு, மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்தோம். இருந்தும், சாப்பாட்டை விழுங்க முடியவில்லை. பரிசோதனையில், கழுத்து பகுதியில் இணைந்த பெருங்குடல் சுருங்கி காணப்பட்டது.
வழக்கமான முறையில் இதை பெரிதாக்க முடியாததால், கழுத்து பகுதியில் நூதன அறுவை கிகிச்சை செய்தோம். அதன்பின், வாய் வழியாக நன்றாக சாப்பிட்டதால், ஐந்து கிலோ எடை கூடியது. அடுத்த ஆண்டில், மூச்சுக்குழாயில் பிரச்னை வந்து, அறுவைச் சிகிச்சை செய்தோம்; பல இன்னல்களைத் தாண்டி சிறுவன், வாய் வழியாகவும், 'டியூப்' வழியாகவும் ஆகாரம் குடித்தான்.
அறுவை சிகிச்சை:
நான்கு ஆண்டுகளுக்குப்பின், பெருங்குடலில் மீண்டும் சுருக்கம்; கழுத்து பகுதியில் மீண்டும் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும், பிரச்னை தீராததாலும், பிற குழந்தைகள் புறக்கணிப்பாலும் தற்கொலை செய்யும் அளவுக்கு, மனநிலை மாறியது. பின், மனநல மருந்துகள் கொடுத்து, கடந்த ஆண்டு மே மாதம், கழுத்து பகுதியில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்தோம்; பெருங்குடலில் ஒரு பகுதியை சீரமைத்தோம்.
ஆறு ஆண்டுகளில், சோதனை மேல் சோதனை வந்தது. 13 அறுவை சிகிச்சைகள், 15 முறை உணவுக்குழாய் விரிவுபடுத்தும் சிகிச்சைகளும் செய்தோம். தற்போது, சிறுவன் நன்றாக சாப்பிடுகிறான்; பேசுகிறான். உடல் எடையும், 10 கிலோ கூடி உள்ளது. சிறுகுடல் டியூப்பையும், மூச்சுக்குழாய் டியூப்பையும் அகற்ற உள்ளோம். இது, பல்வேறு துறை டாக்டர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'ஆசிட்' குடித்தால் என்ன செய்யலாம்?
டாக்டர் சந்திரமோகன் கூறுகையில்,''தவறுதாலாக யாரேனும் ஆசிட் குடித்துவிட்டால், உப்பு கரைசல் கொடுத்து வாந்தி எடுக்க வைக்க முயற்சிக்க வேண்டாம். ஆசிட் செல்லும்போதும், திரும்பும் போதும் இரட்டை பாதிப்பை ஏற்படுத்தி விடும். டியூப் போட்டு எடுக்க முயற்சிப்பதும் தவறு. உணவுக்குழாய், இரைப்பையில் புண் உண்டாகி உயிரிழப்புக்கு காரணமாகிவிடும். உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதே சிறந்தது,'' என்றார்.
'அம்மாக்களே கவனமா இருங்க...':
''விவரம் தெரியாம ஆசிட் குடித்து, நான் பட்ட வேதனை கொஞ்சம்; நஞ்சமல்ல... வீடுகளில் சுத்தம் செய்ய, யாரும் ஆசிட் வாங்காதீங்க... அப்படியே வாங்கினாலும், குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில, மறைச்சு வையுங்க... என்னை மாதிரி உங்க குழந்தைகளும் தவறுதலா, 'கூல் டிரிங்ஸ்'னு நினைச்சு, ஆசிட்டை குடிச்சிட வாய்ப்பிருக்கு... நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வேண்டாம்; அம்மாக்களே ரொம்ப கவனமா இருங்க...

No comments:
Post a Comment