ஏப்ரல் 22: எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்திருந்த ‘ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்’ என்ற குடும்ப நிகழ்ச்சி 20.04.12 வெள்ளியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்ற இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் சுமார் 180-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கு பெற்று பயனடைந்தனர்.
முன்னதாக,திருமறை வசனங்களை ஓதி சகோ. அப்துல் மாலிக் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
EIFFன் பணிகள் குறித்த அறிமுகவுரையை சகோ. ஸியாத் அவர்கள் நிகழ்த்தினார்.
அமீரகத்தில் EIFF செய்து வரும் பல்வேறு சமூகநலப் பணிகளைப் பற்றி அவர் எடுத்துரைத்தார். துபாய் முனிசிபாலிட்டியுடன் இணைந்து கடற்கரைகளைச் சுத்தப்படுத்துதல், லேபர் கேம்ப்களில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல், லேபர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், உடலும் உள்ளமும் புண்பட்டு மருத்துவமனைகளில் அடைந்து கிடக்கும் நோயாளிகளைச் சந்தித்து பூக்களையும், பழங்களையும் அன்பளிப்பாக அளித்து ஆறுதல் கூறுதல், அமீரகத்தில் ஆதரவற்று நிற்கும் இந்தியர்களுக்கு உரிய உதவிகளைச் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை EIFF செய்து வருவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதன்பின் ‘இஸ்லாமியப் பார்வையில் பெற்றோர் பேண வேண்டிய கடமைகள்’ என்ற தலைப்பில் சகோ. செய்யது அலீ அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இஸ்லாம் காட்டித் தந்த வழியில் குழந்தைகளின் வளப்பு முறை பற்றியும், குழந்தைகளை நல்முறையில் வார்த்தெடுக்க பெற்றோர்கள் பேண வேண்டிய கடமைகள் பற்றியும் அழகுற விளக்கினார்.
பின்னர் ‘பணி அழுத்தத்திற்கிடையில் மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?’ என்ற தலைப்பில் சகோ. ஸாதிக் அலீ அவர்கள் உரையாற்றினார். அவர் பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் மூலம் குடும்பத்திலும், அலுவலகத்திலும், வெளியுலகிலும் எழும் பிரச்னைகளால் ஏற்படும் மனஅழுத்தம் பற்றி விரிவாக விளக்கினார். மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது, மன அழுத்தத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பவை பற்றியும் சிறப்பாக அவர் விளக்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக ‘ஆரோக்கியமான வாழ்வுக்கு அருமையான குறிப்புகள்’ என்ற தலைப்பில் துபாய் ராஷித் மருத்துவமனையில் சீனியர் ஃபிஸியோதெரபிஸ்டாகப் பணியாற்றும் டாக்டர் முஹம்மத் இஸ்மாயீல் அவர்கள் சிறப்புரையாற்றினார். தனது உரையின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்ட அவர் நவீன உலகில் நமது வாழ்க்கைப் பாணி (Life Style) முற்றிலும் மாறிவிட்டதையும், அதனால் இன்று பல நவீன நோய்கள் உருவாகி விட்டதையும் உணர்த்தினார். முன்னதாக கலந்துகொண்ட அனைவரது எடையையும், உயரத்தையும் EIFF தன்னார்வத் தொண்டர்கள் சோதனையிட்டு, BMI எனும் Body Mass Index-ஐப் பதிவு செய்து கொடுத்தனர். அதனை அடிப்படையாக வைத்துப் பேசிய டாக்டர் அவர்கள் கலந்துகொண்டவர்களின் உடல் நிலையை அவரவர்களே கண்டறிந்திடச் செய்தார்.
பெண்கள் தங்கள் இல்லங்களில் இருந்துகொண்டே ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்ட அவர், அதற்காக பல ‘டிப்ஸ்’களைத் தந்தார்.
தினமும் சில மணித்துளிகளாவது உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
குழந்தைகளுக்குத் தனியாக திருக்குர்ஆன் ஓதுதல், வினாடி வினா, ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ETA ஸ்டார் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் செய்யது M. கலந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்துத் தந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு ETA-MBM நிறுவனத்தின் பொது மேலாளர் சகோ. ஷாகுல் ஹமீது, வீ. களத்தூர் ஜமாஅத் தலைவர் சகோ. முஹம்மது அலீ, முத்துப்பேட்டை ஜமாஅத் நலச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சகோ. அப்துர் ரஹ்மான் மற்றும் கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்ஃபேர் அசோசியேசன்(KIWA) தலைவர் சகோ. நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக சகோ. இம்ரான் அவர்கள் நன்றியுரை நவில, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு ‘உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும்’ என்ற தலைப்பில் ஒரு சிற்றேடு இலவசமாக வினியோகிக்கப்பட்டது. அத்தோடு அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
அனைவருக்கும் கருத்துப் படிவம் (Feedback Form) கொடுத்து நிகழ்ச்சி குறித்து அவர்களின் கருத்துகள் எழுதி வாங்கப்பட்டன. கலந்துகொண்ட அனைவரும் இந்த இனிய மாலை நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அகமகிழ்வுடன் கூறி விடைபெற்றுச் சென்றனர்.
EIFFன் தன்னார்வத் தொண்டர்கள் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை வெகு விமரிசையாகச் செய்திருந்தனர். கலந்துகொண்ட ஆண்களுக்கு ஆண் தொண்டர்களும், பெண்களுக்கு பெண் தொண்டர்களும் சேவைகள் புரிந்தனர்.
நிகழ்ச்சி முழுவதையும் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.

No comments:
Post a Comment