கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனாதான் காரணம்: ஒபாமா - BBC

BBC

Saturday, March 3

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனாதான் காரணம்: ஒபாமா


மார்ச் 3: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனா, பிரேஸில் ஆகிய நாடுகள்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டினார்.
நாட்டின் எரிசக்தித் தேவையில் தன்னிறைவை எட்ட ஒபாமா எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்றும், பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதற்கு தெளிவான கொள்கை வகுக்கப்படாததுதான் காரணம் என்றும் குடியரசு கட்சி வேட்பாளர்கள் ஒபாமா மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
தேர்தலை சந்திக்க வேண்டியிருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள்தான் காரணம் என்று ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க, தன் மீதான பழியை இந்தியா, சீனா மீது போட்டுள்ளார் ஒபாமா.
இந்திய, சீனா ஆகிய நாடுகளில் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இவ்விரு நாடுகளில் வசிக்கும் மக்கள் அமெரிக்கர்களைப்போல கார்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
எனவே எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்று கூறினார்.
எண்ணெய் வளத்தைப் பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தைக் குறைத்துள்ளார் ஒபாமா.
இந்த மானியத்தை சுத்தமான மாற்று எரிசக்தி நிறுவனங்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் ஓடும் கார்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடி கார்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் ஒரு கோடி கார் என்றால் நினைத்துப் பாருங்கள் என்று ஒபாமா கேட்டார். இந்தியாவும், சீனாவும் அமெரிக்கர்களைப் போல வளம் மிக்கவர்களாக உருவாகி வருகின்றனர். இதனால் அவர்கள் அதிக எண்ணிக்கையில் கார்களை வாங்குகின்றனர்.
இதனால் எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று குறிப்பிட்ட ஒபாமா, எண்ணெய், எரிவாயு விலையைக் குறைப்பது தொடர்பாக எவ்வித வாக்குறுதியையும் அமெரிக்க மக்களுக்கு அளிக்கவில்லை.
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து மானியம் அளிப்பதைத்தான் எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்களா? அல்லது அமெரிக்காவை தூய்மையான நாடாக மாற்றும் முயற்சிக்கு அமெரிக்க மக்களுக்கு துணையாக இருக்க விரும்புகிறார்களா என்று அவர் கேள்வியெழுப்பினார்.

No comments:

Post a Comment