மார்ச். 2- 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுமார் 7 கோடி செல்போன் சேவை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே 400 நாள் கால அவகாசம் கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய தொலைத் தொடர்பு துறை மந்திரியாக ஆ.ராசா பதவி வகித்தபோது, தவறான முறையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததால், அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்து செய்து உத்தர விட்டது. இந்த உரிமங்களை3 ஜி ஸ்பெக்ட்ரம் எந்த முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ, அதே நடைமுறையில் புதிய விலையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், இந்த புதிய ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கைகளை 4 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2 ஜி ஸ்பெக்ட்ரம் என்பது இயற்கை வளங்களில் ஒன்றாகும். இதன்மீது மேற்கொள் ப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியிடம் ஆலோசனை கேட்பது வழக்கம். எனவே, அவரிடம் ஸ்பெக்ட்ரம் ஏலம் பற்றி கலந்தறிய வேண்டிய இருக்கிறது. எனவே புதிய ஒதுக்கீடு வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். இல்லை எனில் நாடு முழுவதும் உள்ள 7 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர். புதிய ஒதுக்கீட்டு உரிமம் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் முழுமை பெற 400 நாட்களாவது தேவைப்படும். எனவே கால அவகா சத்தை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
தவிர 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலக அதிகாரிகளையும் தொடர்புபடுத்தி அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கோரியும் மத்திய அரசு சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ஆ.ராசாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கடந்த 2008-ல் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதினார். இதற்கு பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பதில் கிடைக்காததால், சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரை கொண்ட பெஞ்ச் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு வழங்கியது. அரசு ஊழியர்களுக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்படும் முன்பாக, அவர்கள் மீது வழக்கு தொடர சம்பந்தப்பட்ட அலுவலகத்திடம் அனுமதி கேட்கலாம். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எந்தவொரு மந்திரியையும் விசாரிக்க பிரதமர் அலுவலகத்திடம் நேரடியாக அனுமதி கேட்கலாம். அந்த கோரிக்கைகளை பிரதமர் அலுவலகம் பரிசீலித்து வழக்கு தொடர்வது குறித்து 3 மாதங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும்.
நான்கு மாதங்களுக்கு பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பதில் வரவில்லை என்றும், சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடர அனுமதி கிடைத்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவர்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர முடியும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு ஊழியர்களுக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப் படுவதற்கு முன் பாகவே, அவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி கேட்கலாம் என்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். புகார்கள் பதிவு செய்யப்பட்ட பின்புதான் வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த மனுவானது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட வில்லை. வரையறைக்கு உட்பட்டு, சில பிழைகளை திருத்த வேண்டும் என்பதை மட்டுமே கோருகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சில தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. அதேபோல சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் தனது செயல்பாடு குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்து ஏற்புடையதாக இல்லை என்று கூறி, ஆ.ராசா இன்று சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே 2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான 122 உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்த தீர்ப்பின் விளைவு குறித்து, பி.சி.சாக்கோ தலைமை யிலான பாராளுமன்ற கூட்டு குழு இன்று கூடி விவாதித்தது. மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சக அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment