வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக்கொலை - BBC

BBC

Thursday, February 23

வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக்கொலை

 பிப். 23 : சென்னையில் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட 5 வடமாநில கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற சென்னை காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்களுடனான மோதலில் 5 கொள்ளையர்களும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  
சென்னையில் கடந்த இரு வாரங்களில் இரண்டு வங்கிகளில் துப்பாக்கி முனையில் லட்சக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை கும்பலைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இந்த நிலையில், வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் வங்கிக் கொள்ளையர்கள் இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்கள் குடியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இந்த நிலையில், கொள்ளையர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினரும் திருப்பிச் சுட்டதில் 5 கொள்ளையர்களும் உயிரிழந்தனர்.
வீட்டில் கட்டுக்கட்டாக பணம்
அவர்களது வீடுகளில் கட்டுக்கட்டாக பணமும், ஆயுதங்களும் இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்புடையவர்கள் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
என்கவுண்டரில் கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களின் உடல்களும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேச பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த காவல்துறையினர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். இவர்கள் கொள்ளையர்கள் என்று அப்பகுதியில் வசிக்கும் எவருக்கும் இதுவரை சந்தேகம் வரவில்லை. என்கவுண்டர் நடந்த பிறகுதான் பலருக்கும்  இவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.
முதல் கட்ட விசாரணையில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையர்கள் 5 பேரும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களின் பெயர்கள் வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத், சசிகரே, அபேகுமார் என்பதாகும்.
இவர்கள் நேற்று இரவே தமிழகத்தில் இருந்து பீகாருக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. வீட்டு உரிமையாளரிடம் வாடகை பாக்கியை கொடுத்து விட்டு இன்று இரவோடு கிளம்பி விடுகிறோம் என்று கூறியுள்ளனர். அப்போதுதான் வீட்டு உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், டிவியில் கொள்ளையர்களின் வீடியோ படம் ஒளிபரப்பானதும், அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment