கூடங்குளம் போராட்டத்துக்கு நிதி உதவி:3 அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் உரிமம் ரத்து - BBC

BBC

Saturday, February 25

கூடங்குளம் போராட்டத்துக்கு நிதி உதவி:3 அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் உரிமம் ரத்து



பிப். 25- கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக, உடனடியாக 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட முடியாமல் முடங்கி கிடக்கிறது.

கூடங்குளம் பகுதியில் பொது மக்கள் போராட்டம் நடத்துவதற்கு வெளி நாடுகளில் நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் உதவுகின்றன என்று மத்திய மந்திரி நாராயணசாமி குற்றம் சாட்டி இருந்தார். இதை,அணுஉலை எதிர்ப்பு குழுவினர் மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'சயின்ஸ்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எங்கள் நாட்டு வளர்ச்சிக்கு எதிராக அமெரிக்காவிலும் பல்வேறு நாடுகளிலும் இருந்து நிதி பெறுகின்ற தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. 

கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படுவதற்கு அமெரிக்காவில் செயல்பட்டு வருகின்ற தொண்டு நிறுவனங்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் பிரதமரின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் மத்திய மந்திரி நாராயணசாமி அளித்துள்ள பேட்டி வருமாறு:-

கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு அமெரிக்காவில் இருந்து நிதி கிடைக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இதனால் அமெரிக்க அரசு தான் போராட்ட குழுவினருக்கு நிதி வழங்குவதாக கருதக் கூடாது.

அமெரிக்காவில் உள்ள சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நல்ல நோக்கத்துக்காக இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்கின்றன. உடல் ஊனமுற்றோர், தொழு நோயாளிகள் போன்றவர்களின் மறுவாழ்வு திட்டங்களுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது.

அந்த நிதி கூடங்குளம் பகுதியில் உள்ள சில அமைப்புகளுக்கும் வருகிறது. அதை மக்கள் நலனுக்கு பயன்படுத்தாமல் சில தொண்டு நிறுவனங்கள் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றன.

அமெரிக்க நிதியை கொண்டு கூடங்குளம் அணுமின்நிலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு மக்களை திரட்டுவது,லாரிகளை வாடகைக்கு எடுத்து மக்களை அழைத்து வருவது, போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு பணம் கொடுப்பது, உணவு வழங்குவது போன்றவை நடந்துள்ளன.

வெளிநாட்டு நிதியை தவறாக பயன்படுத்தியதாக புகாருக்கு உள்ளான 12 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்தது. அதில் 3 நிறுவனங்களின் செயல்பாடுகள் அரசுக்கு எதிராக இருந்தது உறுதி ஆனது.

எனவே அந்த தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கை எடுப்பது குறித்தும் உள்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

No comments:

Post a Comment