
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 4 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இதுவரை 7 லீக் ஆட்டம் முடிந்துவிட்டது. அதன்படி ஆஸ்திரேலியா 5 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று முன்னணியில் உள்ளது. இந்தியா 5 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு டையுடன் 10 புள்ளிகளும், இலங்கை 4 ஆட்டத்தில் 1 வெற்றி, 2 தோல்வி, ஒரு டையுடன் 7 புள்ளிகளும் பெற்று உள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவான பந்துவீச்சு காரணமாக டோனிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றை ஆட்டத்தில் ஷேவாக் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் இப்போட்டியின் 8-வது லீக் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்றது. டோனிக்கு பதிலாக பார்த்தீவ் பட்டேல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். ஜாகீர்கான் நீக்கப்பட்டு அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார்.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக தில்ஷானும், ஜெயவர்த்தனேவும் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய ஜெயவர்த்தனே 45 ரன்களும், தில்ஷான் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சங்ககாரா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து வந்த சண்டிமால் 38 ரன்கள் எடுத்திருந்தோது இர்பான் பதான் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய திரிமன்னே 62 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெரேரா 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேத்யூஸ் 49 ரன்களும் மஹரூப் 4 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணி 50 ஒவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் இர்பான் பதான், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வினய்குமார், சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி களமிறங்கியது.
சேவாக்கும் தெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை மலிங்கா வீசினார். முதல் ஓவர் 2வது பந்தில் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து தெண்டுல்கருடன் காம்பீர் ஜோடி சேர்ந்தார். தெண்டுல்கர் 22 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 7.5 ஓவரில் 38 ரன்னாக இருந்தது. அடுத்து விராட் கோலி காம்பீருடன் ஜோடி சேர்ந்தார். காம்பீர் 29ரன்னில் ஆடடம் இழந்தார்.
கோக்லி சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ரெய்னா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். கோக்லி 66 ரன்கள் எடுத்த போது பெரேரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 17, பார்திவ் படேல் 4 , அஸ்வின் 5, வினய் குமார் 0 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாய் ஆடிய இர்பான் பதான் 34 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக இழந்தார்.
இந்திய அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் பெரேரா 4 விக்கெட்டுகளையும், குலசேகரா 3 விக்கெட்டுகளையும், மலிங்கா 2 விக்கெட்டுகளையும், மஹரூப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
