
ஈரான் நாடு அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக கூறி வரும் அமெரிக்கா, அந்த நாட்டை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணையை கொள்முதல் செய்யாதீர்கள் என்று தன் நட்பு நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் இந்த முட்டுக்கட்டை காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதை ஈரான் நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 மாதமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 128 டாலராக உள்ளது. இது கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஏற்கனவே நஷ்டத்தால் தவித்துக் கொண்டிருந்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 5 மாநில தேர்தல் காரணமாக விலையை உயர்த்த முடியாமல் உள்ளன. இந்த நிலையில் ஈரானில் இருந்து வரும் கச்சா எண்ணெய் வரத்தில் இடையூறு ஏற்பட்டிருப்பது இந்திய எண்ணெய் நிறுவனங்களை கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 15 சதவீதத்தை ஈரான் நாடு பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஈரான் தன் கச்சா எண்ணெய் சப்ளையை குறைத்து விட்ட காரணத்தால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 4, டீசல் விலையில் லிட்டருக்கு
ரூ. 14, கியாஸ் விலையில் சிலிண்டருக்கு ரூ. 390 வரை இழப்பு ஏற்படுகிறது.
5 மாநில தேர்தல் முடிந்ததும், உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலைகளை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் உறுதியாக உள்ளன. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 4ம், டீசல் விலையை லிட்டருக்கு
ரூ. 3ம் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமையல் கியாஸ் விலையில் சிலிண்டருக்கு ரூ. 50 அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவதை தவிர வேறு மாற்று வழி இல்லை என்றார்.
